இந்திய ராணுவத்தில் புதிய திட்டம்?

உலகின் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு வருகிறது.

ராணுவத்தில் அதிக காலம் பணியாற்ற விரும்பாமல், குறுகிய காலத்திற்கு மட்டும் பணியாற்றி ராணுவ வாழ்க்கையை அறிந்துகொள்ள விரும்பும் இளைஞர்களுக்காக, இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு “டூர் ஆஃப் டூட்டி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எப்போதும் போல வயது, உடல் தகுதி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆள் சேர்ப்பு நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த், முதற்கட்டமாக 100 அதிகாரிகள் மற்றும் 1,000 ஜவான் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி செலவு, ஊதியம் உள்ளிட்டவற்றுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ராணுவம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவு திருப்திகரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, அதிகாரி ஒருவர் 10 முதல் 14 ஆண்டுகளுக்கு பிறகு பணியிலிருந்து விடுவிக்கப்படும் போது, பயிற்சி, ஊதியம் உள்ளிட்டவற்றிற்காக சுமார் 5 கோடியே 12 லட்சம் ரூபாய் முதல், 6 கோடியே 83 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

ஆனால் “டூர் ஆஃப் டூட்டி” திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டால், 80 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரைதான் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இதன்மூலம் பல கோடி ரூபாய் சேமிக்கப்படும் எனவும், அந்த தொகையை ராணுவத்தின் பிற மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு, அரசு மற்றும் தனியார் துறை வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், ராணுவத்தில் பணியாற்றுவதன் மூலம் இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், குழுவாக சேர்ந்து பணியாற்றவும், மன அழுத்தத்தை கையாளவும், தங்களது பொறுப்புகளை உணரவும் ராணுவப் பணி இளைஞர்களுக்கு பெரிதும் உதவும்.

இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version