தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க உதவியாக யாதும் ஊரே என்ற பெயரில் புதிய இணையதளம் 60 லட்சம் செலவில் உருவாக்கப்படும், தூத்துக்குடியில் 634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
110-ன் கீழ் புதிய அறிவிப்புகள்
தூத்துக்குடி மாவட்டம் முல்லைக்காடு பகுதியில் ரூ.634 கோடியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்
வல்லம் – வடகால் மற்றும் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டடங்கள் தலா ரூ.50 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்
சிப்காட் வல்லம் – வடகால் மற்றும் ராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்
சிப்காட் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் வணிக வசதிகள் மையம் ஒன்று ரூ.40 கோடி செலவில் 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்படும்
கோயம்புத்தூரில் 9 ஏக்கரில் ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ.200 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்
சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தங்கும் விடுதிகள் ரூ.64.41 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்
ரூ.40.80 கோடி செலவில் நம்பிக்கை இணைய கட்டமைப்பு அமைக்கப்படும்
பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஆவணங்கள், சான்றிதழ்கள் “மக்களைத் தேடி அரசு” என்ற திட்டம் ரூ.90 கோடி செலவில் செயல்படுத்தப்படும்