காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிலையம் என 2 சேவைக்கான நிலையங்களும் இயங்குகின்றன. இந்திய அளவில் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலின் சென்னை விமான நிலையம் முன்னிலை வகிக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதால் ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னைக்கு அருகே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முடிவை தமிழக அரசு எடுத்தது. அதன்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’-ல், ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசு தெரிவித்து வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்ற இந்திய விமான நிலைய ஆணையம், காஞ்சீபுரத்தை அடுத்துள்ள பரந்தூரை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.