அசகாய சூரன் என்ற சொல், இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு அப்படியே பொருந்தும். ஸ்டம்பிங் செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இதற்காக, தற்போது ஐசிசியின் பாராட்டை பெற்றுள்ளார் தோனி.
கிரிக்கெட் வரலாற்றிலேயே, அதிவேக ஸ்டம்பிங்கிற்கான சாதனையை தன் வசம் வைத்துள்ளவர் தோனி. நம் இமைகள் இமைப்பதற்கே 0.1 வினாடி ஆகும். ஆனால், தோனி 0.09 வினாடிகளில் செய்துள்ள ஸ்டம்பிங்கே, தற்போதுவரை அதிவேக ஸ்டம்பிங்கிற்கான சாதனையாக திகழ்கிறது. சமீபத்தில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கூட, அப்படி ஒரு ஸ்டம்பிங்கை செய்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த டெய்லரின் விக்கெட்டை சாய்த்தார் தோனி.
இதேபோல், 5-வது ஒருநாள் போட்டியில், நீஷம் கிரீஸை விட்டு வெளியேறியபோது, மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று பந்தை எடுத்து எறிந்து அவரின் விக்கெட்டை சாய்த்தார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஐசிசி, தோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருக்கும்போது, யாரும் க்ரீஸை விட்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்று தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
இந்த போட்டி முடிந்த பிறகு, பந்துவீச்சாளர் சாஹல், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உட்பட பலரை நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, தோனியிடம் மைக்கை எடுத்துக் கொண்டு சென்றார் சாஹல். இதனைக் கண்ட தோனி, ஆளை விடுப்பா என்ற தொனியில் மைதானத்திலிருந்து ஓட்டம் பிடித்தார். சாஹல் அவரை துரத்திக் கொண்டு ஓட, இறுதியில் தோனி மைதானத்திலிருந்தே வெளியேறிவிடுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது தோனி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், தோனி அவருடைய குழந்தையுடன் கடற்கரையில் விளையாடும் வீடியோவும் வைரலானது. இதுபோல், வெளியில் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகிலும், பல வீரர்கள் தோனிக்கு ரசிகர்களாக உள்ளனர். அசகாய சூரனாயிற்றே… அனைவரும் ரசிகர்களாகத்தானே இருப்பார்கள் !!