எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என எழுச்சிபெற கூடிய இந்திய புரட்சி நாயகனும் இந்தியர்களின் இதயத்தில் சுதந்திரத்தை ஆழ விதைத்த அஞ்சா நெஞ்சருமான சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளான இன்று அவரையும் அவரின் வீரச்செயல்களின் சிலவற்றையும் தற்போது நினைவு கூறலாம்…
ஒரு வங்காள இந்து குடும்பத்தில் ஒன்பதாவது மகனாக பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பெற்றோரின் ஆசைக்கிணங்க இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆங்கிலேயரிடம் பணிக்கு சேர்ந்தார். ‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ என முடிவு செய்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட நேதாஜி 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் சுபாஸின் கொள்கை. தனது கொள்கையை முழங்கி ஒவ்வொரு இளைஞனையும் தனது சீரிய பேச்சால் சுதந்திர போரில் பங்குபெற செய்தார். இவ்வரின் கொள்கையை பார்த்து வியந்த ரவீந்திரநாத் தாகூர் நேதாஜி என்ற பட்டத்தை வழங்கினார். மக்களின் மனதில் சுதந்திர எண்ணத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக சுபாஷை பிரிட்டிஷ் அரசு சிறை பிடித்தது. சிறையில் இருக்கும் போதே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி. 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜிக்கு எதிராக காந்தி வேட்பாளரை களமிறக்கினார். அத்தேர்தலில் நேதாஜி வெற்றி பெற இது தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படையாக அறிவித்தார் காந்தி. இதனால், நேதாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாக வெளியேறி பார்வர்ட் பிளாக் என்ற கட்சியைத் துவங்கினார்.1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தையும் நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி 1943 ல் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். இதில் பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். கிட்டத்தட்ட 40,000திற்கும் மேற்பட்ட போர் வீரர்களை கொண்ட நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ படை பிரிட்டனுக்கு எதிராக போரிட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர். தமிழர்களின் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்த அவர் அடுத்த ஜென்மத்தில் தமிழராய் பிறக்க ஆசை கொள்வதாக தெரிவித்தார். போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்தியானவை. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு முக்கிய காரனமாக அமைந்தது. வீட்டுச் சிறையில் கண்கானிப்பில் இருந்த நேதாஜி,ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட்ட போது , ஜெர்மனியிலிருந்து முழங்கினார் சுபாஷ் , மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் நேதாஜி பெயருக்கு ஸ்பெஷல் இடம் இன்றும் உண்டு.
இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகனும் வரலாற்றை ஓர் அழியா சரித்திரமாகிய நேதாஜி சுபாஷ் சந்திரா போசின் இறப்பு இன்றும் புரியாத புதிராக உள்ளது. அவர் இன்று இல்லை என்றாலும் புரட்சியை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் மனத்திலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை..