பரந்து விரிந்த இந்த பூலோகத்தை எடுத்துக் கொண்டால் அதில் கண்ணுக்கு எட்டியவரை நீலக்கடல் இருப்பது தெரியும். மூன்றில் இரண்டு பங்கு நீரும், ஒரு பங்கு நிலப்பரப்பும் உடைய புவியானது பல்வேறு மலைத்தொடர்களையும் சிகரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான சிகரம் கே2 என்று அழைக்கப்படுகிற காட்வின் ஆஸ்டின் ஆகும். இதன் உயரம் 8611 மீ. உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 8848 மீ. பள்ளி வகுப்புகளில் ஆசிரியர் இந்த மீட்டரை ஞாபகம் வைத்துக்கொள்ள “எட்டு எட்டா நாலு எட்டு வச்சா எவரெஸ்ட் வந்துவிடும்” என்று சொல்லிக் கொடுப்பார்.
அப்படிப்பட்ட உலகின் மிக உயரமான சிகரத்தில் ஏறுவது என்பது சாதாரணக் காரியம் அல்ல. சாகசப் பயணிகள் பலர் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனைப் படைத்து வருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும் ஷெர்பா டென்சிங் நோர்கேவும் 1953 மே29 ல் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 1975 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் ஜூங்கோ ஆவார்.
உலகிலேயே 26 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற சாதனையை நேபாள தேசத்தைச் சேர்ந்த பயணிகள் வழிகாட்டியான கமிரீடா ஷெர்பா படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை அதே நேபாளத்தைச் சேர்ந்த பசங் தவா ஷெர்பா 26 முறை எவரெஸ்ட் ஏறி முந்தையவரின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனிடையே கமிரீடா தனது 27 வது பயணத்திற்காக எவரெஸ்ட் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளார்.
Discussion about this post