விண்ணில் ராக்கெட் ஏவது மட்டும் விஞ்ஞானம் அல்ல, மண்ணில் விதைகளை விதைப்பதும் விஞ்ஞானம் தான். அப்படி மண்ணில் விஞ்ஞானம் செய்தவர் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய நெல் பயிர்களை மீட்டெடுத்த அவரை, புற்று நோயிடமிருந்து மீட்டு எடுக்கமுடியவில்லை. நெல்லுக்கு தனியாக ஆண்டுதோறும் திருவிழா எடுத்தவர் தான் நெல் ஜெயராமன்.
நம்மாழ்வார் தான் கையில் இருந்த 7 பாரம்பரிய நெல்விதைகளை நெல் ஜெயராமனிடம் கொடுத்து, விவசாயிகளிடம் இந்த நெல் விதைகளை பரப்ப வேண்டும் என்று கூறினார். தன் ஆசான் கூறியது போல், 2004-2005ஆம் ஆண்டுகளில் அந்த நெல் விதைகளை கொண்டு விவசாயம் செய்த ஜெயராமன் அதற்கான பலனும் அடைந்தார்.மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ஜெயராமன் கூடுதல் நெல் விதைகளை மறுஉற்பத்தி செய்தார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, விவசாயத்திற்கு நம்பிக்கை அளித்தார். மேலும் திருவிழாவில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல்லை கொடுத்தார்.
தான் கொடுத்த விதைநெல்லை, விவசாயிகள் தங்கள் வயல்களில் விதைத்து விவசாயம் செய்து, அடுத்து ஆண்டு நடக்கும் திருவிழாவில் 4 கிலோ விதை நெல்லை கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதிமொழி பெற்று கொண்டார்.அதே போல் விவசாயிகளும், விதைத்து பலன் அடைந்தனர். நெல் ஜெயராமனின் இந்த முயற்சி மூலம், சுமார் 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்கப்பட்டது. இவரது செயல்முறைகள் ஐ.டி இளைஞர்களையும் வயல் பக்கம் திரும்ப செய்தது.