போட்டித்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கூடாது : உயர் நீதிமன்றம்

போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஐடி நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சிபெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2013 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், பிரதான தேர்வில் 50 மதிப்பெண் எடுக்க வேண்டிய நிலையில், 47 மதிப்பெண் மட்டுமே எடுத்ததால், அட்வான்ஸ் தேர்வு எனப்படும் அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி சசிதரன், மாணவன் நெல்சனை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவும், விடைத்தாளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்நிலையில், பல வருடங்களாக நடந்துவரும் இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வியில் முன்னேறிய நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படுவதில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Exit mobile version