நீட் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையாமல், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் தங்களுக்கு மதிப்பெண் குறைந்து இருப்பதாகவும், தேர்வு எழுதிய மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்று இன்று விசாரணைக்கு வருகிறது.