நீட் தேர்வு – திருத்தப்பட்ட பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது!

நீட் தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பில் குளறுபடிகள் காணப்பட்டதால் திருத்தப்பட்ட பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல், உத்தர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிக குறைவாக உள்ள போதிலும் அந்த மாநிலங்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டதால் உடனடியாக அந்த அறிக்கை இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், திருத்தப்பட்ட பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வின் விடைத்தாள் திருத்தத்திலும் குளறுபடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. விகாஸ் கோயல் என்ற மாணவர் 600க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறும் நிலையில் அவருக்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு விகாஸ் கோயல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

Exit mobile version