நீட் தேர்வெழுத அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை இந்தாண்டு ஏற்படாது

இந்தாண்டு நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அதிகமான நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருப்பதால், இந்தாண்டு நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்காது என்று கூறினார்.

419 மையங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருவதாக கூறிய அவர், கடந்த ஆண்டு 210 பள்ளிகளில் செய்யப்பட்டிருந்த கட்டமைப்பு வசதி இந்தாண்டு 520 பள்ளிகளில் செய்யப்பட்டிருப்பதாகவும், ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினாலும் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

நீட் தேர்வு எழுதும் பல்வேறு மொழிகளை பேசுபவர்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே வினாத்தாள் அமைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கடினமாக இருந்தாலும் வரும் காலங்களில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறிய அவர் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தப்படாது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version