நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளநிலையில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அறிந்துகொள்ளலாம்…
நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக காலை 11.30 மணி தொடங்கி 1.30 மணி வரை தேர்வெழுதும் மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். 1.30 மணிக்கு மேல் ஒரு நொடி தாமதமானாலும் தேர்வெழுதும் மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஒரு புகைப்படத்தை வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்காக மாணவர்கள் எடுத்து வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.
பேனா, பென்சில், கால்குலேட்டர், லாக் அட்டவணை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து வருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். எந்தவிதமான அணிகலன்களையும் மாணவ மாணவிகள் அணிந்து வரக் கூடாது. குறிப்பாக பெல்ட், தோள்பை, கைப்பை, தொப்பி, பர்ஸ் மற்றும் பிரேஸ்லெட் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது. உணவு வகைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வரக் கூடாது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் முன் அனுமதி பெற்று மாத்திரை மற்றும் உணவை எடுத்து வரலாம்.
உடைகளைப் பொறுத்தவரை, சாதாரண ஸ்லிப்பர் மற்றும் உயரம் குறைந்த காலணிகளை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும். ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வரக் கூடாது. பாரம்பரிய, மதம் சார்ந்த உடைகளை அணிபவர்கள், சோதனைக்கு வசதியாக பகல் 12.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும்.
தேர்வெழுதிய மாணவ மாணவியர் மாலை 5 மணிக்கு பிறகே தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.