செப். 13-ல் நீட் தேர்வு – மீண்டும் உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை வரும் 13ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துவருகிறது. அதைத் தள்ளிவைக்கக் கோரி 11 மாணவர்கள் தாக்கல்செய்த மனுக்கள் முன்னதாக தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து, கேசவ் மகேஸ்வரி உள்பட மூன்று மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.

அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் இன்னும் தொடர்வண்டிச் சேவை தொடங்காததால், கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுகளை கணிசமானவர்கள் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்ட மனுதாரர்கள், இலட்சக்கணக்கான மாணவர்கள் தொடர்பான நீட் தேர்வை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரினர். நீதிபதி அசோக் பூசண் தலைமையிலான அமர்வு, மனுதாரர்கள் கோருவதைப் போல நீட் தேதியை மாநிலத்திற்கு மாநிலம் மாற்ற முடியாது என மறுத்துவிட்டது.

மேலும், நீட் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில் மனுக்களை ஏன் விசாரிக்கவேண்டும் எனக் கேட்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், திட்டமிடப்படி வரும் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

Exit mobile version