கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு, கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
மருத்துவம், பல்மருத்துவம் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத, 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85 சதவிகித மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுதி இருந்தனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
இதையடுத்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு என இரண்டாவது கட்டமாக கடந்த 14ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் மாலை 4 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.ntaneet.in என்ற இணையத்தில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஒரே நேரத்தில் பலரும் முடிவுகளை பார்த்ததால் தேர்வு முடிவு வெளியான இணையதளம் முடங்கியது.