வங்கிக் கடன் மோசடி வழக்கில், லண்டன் தப்பிச்சென்ற தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, கடந்த 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடும் கடத்தும் வழக்கில், அவருக்கு எதிராக 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் சமர்ப்பித்தன. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 25ம் தேதி உத்தரவிட்டது. இதனிடையே, இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகியோர் விரைவில் இந்தியா அழைத்து வரப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப இங்கிலாந்து உள்துறை அமைச்சக செயலாளர் ப்ரீதி பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவரை மும்பைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளது.