ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ள நீரஜ் சோப்ரா, தடகளத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்ற சாதனையை படைத்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவுடன் கலந்துகொண்ட இந்திய வீரர்களின் முயற்சி ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்த நிலையில்தான், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றுபோட்டி நடைபெற்றது.
இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றுகளில் சிறப்பாக விளையாடி இருந்த நீரஜ் சோப்ரா இந்த போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன், ரசிகர்கள், நீரஜ் சோப்ராவின் உறவினர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மொத்தம் 6 வாய்ப்புகள் கொண்ட இறுதிச்சுற்றின் முதல் வாய்ப்பின் முடிவிலேயே நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை நெருங்கியிருந்தார்.
2 வது வாய்ப்பில் 87 புள்ளி 58 மீட்டர் தூரத்திற்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து தங்கப்பதக்க வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தினார்.
இறுதியில், நீரஜ் சோப்ராவின் இலக்கை மற்ற வீரர்கள் கடக்க முடியாததால், அவர் தங்கப்பதக்கதை வென்று புதிய வரலாறு படைத்தார்.
வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை செக் குடியரசை சேர்ந்த வீரர்கள் கைப்பற்றினர்.
நீரஜ் சோப்ராவிற்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது, 13 ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய தேசிய கீதம் ஒலிம்பிக் மேடைகளில் ஒலிக்கப்பட்டதால், தேசப்பற்றோடு தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளிக்குதித்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், 100 ஆண்டுகளுக்குப் பின்னர் தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் முலம், தற்போதைய இந்திய ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கிற்காக தயாராகி வரும் கோடிக்கணக்கான இளம் வீரர்கள் அனைவருக்கும் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கடைசியாக, கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.