நீல பத்மநாபனின் 84 வது பிறந்த தினம்

எவ்வித பாவனை பாசாங்குக்கும் உள்ளாகாமல், தனக்குத் தெரிந்த சாதாரண மொழியில் எழுதுவதன் மூலம், வாழ்வின் முழுமையை கண்டறியும் கலைப் பிரக்ஞையோடு, ஆத்மார்த்தமான படைப்புகளை வழங்கிய நீல பத்மநாபனின் 84 வது பிறந்த தினம் இன்று….

 

1938 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்து, தீவிர இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியில் பெறும் பங்காற்றியவர் நீல பத்மநாபன்.

வாசிப்பின் மீது தீராத காதல் கொண்டிருந்த அவர், சிறுவயது முதலே மிகத் தீவிரப் பற்றுடன் தமிழில் எழுதத் துவங்கினார்.

“கதைக் கருவைத் தேடி தான் ஒருபோதும் அலைந்ததில்லை, ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில் ஏனோ ஒரு சொல்லத் தெரியாத தன்மையில் சிலிர்த்துப் போய் நேரில் காணும் அல்லது சொல்லிக் கேட்கும் சில கருத்துகளை மட்டுமே தன் மனம் சுவீகரித்துக் கொள்கிறது” எனக் கூறும் நீல பத்மநாபன், இவைகளே தனது படைப்பாக்க உந்துதலுக்கான பின்புலம் என்பதை எழுத்துகளின் வழியே வாசகர்களை உணரச் செய்கிறார்.

தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமர்சனத்திலும், எந்த பட்டியலிலும் நீல பத்மநாபனின் நாவல்களான ‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்டபுரம்’ இடம்பெற்றிருப்பது, அவரது தனித்துவமான எழுத்து வடிவத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

அவரின் உரைநடை, சொல் தேர்வு, சொல்லும் திறன், அணிகள், வாக்கியங்கள், அளவு முறைமை போன்றவைகள், நீல பத்மநாபனின் எழுத்துச் செழுமைக்கு சிறந்த சான்றுகளாக வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ்ப் பண்பாட்டை பின்னணியாக கொண்ட மாந்தர்களை, தனது படைப்புகளில் வெகு சிறப்பாக உட்புகுத்தும் நேர்த்தியும் அவரின் மற்றுமொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், கேரளத்து கலப்புப் பண்பாடு நாயர்கள், கிறிஸ்துவர்கள், ஈழவர்கள் ஆகியோருடனான உரையாடல்களும், அவர்களைப் பற்றிய பதிவுகளும் கூட நீல பத்மநாபனின் படைப்புகளில் நிரம்ப காணப்படுகின்றன.

30க்கும் மேற்பட்ட நாவல்கள், 150க்கும் அதிகமான சிறுகதைகள் உட்பட மேலும் பல படைப்புகளை எழுதியுள்ள நீல பத்மநாபன், இலையுதிர் காலம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version