அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவரின் 2-வது மகள் கனிமொழியே நீட் பயத்தால் தற்கொலை செய்து கொண்டவர். 12 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவி கனிமொழி, கடந்த 12 தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை எதிர்கொண்டுள்ளார். தேர்வு முடிந்து வீடு திருப்பியதில் இருந்து மன உளைச்சலுடன் கானப்பட்ட கனிமொழி, வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோன என்று அச்சம் இருப்பதாகவும் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி கனிமொழி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவராகும் லட்சியக்கனவுடன் இருந்த அவர், நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆட்சி அமைந்ததும் முதல் வேளையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைந்த பிறகும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்களை, திமுக அரசு குழப்பியதால், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம், அடங்குவதற்குள், நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்டது பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.