நெருங்கும் பொங்கல் பண்டிகை – சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் தினசரி இயக்கப்படும் 6,150 பேருந்துகளுடன், 4,078 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற பகுதிகளில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேட்டில் 13 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லியில் ஒரு மையமும் செயல்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஒரு லட்சம் பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் அரசின் முன்னேற்பாடுகளை பயன்படுத்திக்கொண்டு, பாதுகாப்பாக பொங்கல் பயணம் மேற்கொள்ள போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சிரமமின்றி பொதுமக்கள் செல்ல வசதியாக, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில், 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி வரை, 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து பணிகளுக்கு திரும்புவோர் வசதிக்காக ஜனவரி 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் இயக்கம் பற்றி அறிய பிரத்யேக செல்போன் எண்களும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version