கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலை 500 மீட்டர் அளவில், பூமிக்குள் உள்வாங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலை, தேயிலைத் தோட்டம் என சுமார் 500 மீட்டர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியது. உள்வாங்கிய பகுதியில் இருந்த பாறை சரிந்து, மரங்களும் விழுந்ததால் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.