சிவகங்கை அருகே, ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்த இருளப்பசாமியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் விடிய விடிய பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்தார். சிவபக்தரான இருளப்பசாமி, நோய் வாய்ப்பட்டிருந்த போது சிவபெருமான் கனவில் தோன்றி உயிர் பிழைக்க வைத்ததாகவும், இதனால் சிவாலயங்களுக்கு பாதயாத்திரையாக சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, இருளப்பசாமி ஜீவசமாதி அடையும் நேரம் வந்துவிட்டதாக கூறி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. ஜீவசமாதி அடைய 2 மாதங்களாக இருளப்பசாமி உணவு எடுத்துக் கொள்ளாமல், வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி வருகிறார். இந்த நிலையில், நள்ளிரவில் ஜீவசமாதி அடையப் போவதாக கூறிய இருளப்பசாமியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்த நேரம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உட்பட அரசு அதிகாரிகள் பாசாங்கரைக்கு சென்றனர். இருளப்பசாமியை பரிசோதித்த மருத்துவ குழு, நாடித்துடிப்பு சீராக உள்ளதாக தெரிவித்தது. ரத்த பரிசோதனை செய்ய இருளப்பசாமியின் ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை. இதனிடையே, இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதால், அவரை அங்கிருந்து காவல்துறையினர் அழைத்து சென்றனர். மேலும் பொதுமக்கள் களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.