கமுதி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர் மீது டிப்பர் லாரியை ஏற்றிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, மண்டலமாணிக்கம் பகுதியிலுள்ள குண்டாற்றில் இரவில் மணல் கொள்ளை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், கமுதி காவல்துறையினர், இரவில் குண்டாற்றில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது மணல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், டிப்பர் லாரியின் மூலம் தப்ப முயன்றனர். கொள்ளை முயற்சியை தடுக்க முயன்ற காவல்துறையினர், சாலையில் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தினர். ஆனால் அதை பொருட்படுத்தாத டிப்பர் லாரியில் வந்த கொள்ளையர்கள், இருசக்கர வாகனத்தின் மீது மோதினர்.
இதில் தலைமை காவலர் ராமநாதனுக்கு காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் மணல் கொள்ளையர்கள் டிப்பர் லாரியை பாதி வழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். டிப்பர் லாரியை பறிமுதல் செய்த கமுதி காவல்துறையினர் மணல் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.