தியாகராஜர் கீர்த்தனைகளை வாசிக்கும் நாதஸ்வர கலைஞர் ஷேக் மஸ்தான்

மதுரை கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் ஷேக் மஸ்தான் என்பவர் இந்து முறைப்படி நெற்றியில் விபூதி பூசி, தியாகராஜர் கீர்த்தனைகளை நாதஸ்வரம் மூலம் வாசித்து அசத்துகிறார்… அவரைப் பற்றிய செய்தி தொகுப்பை காணலாம்…

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஷேக் மஸ்தான், நாதஸ்வரத்தில் ஆர்வம் மிக்க குடும்பத்தில் வளர்ந்தவர். ஆந்திராவில் உள்ள ராமர் கோயில் ஒன்றில் இவரின் தாத்தா ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக பணிபுரிந்தவர். இவரது சித்தப்பா ஷேக் சின்ன மவுலானாவும் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞராக இருந்தவர். அவரிடம் தான் ஷேக் மஸ்தான் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொண்டுள்ளார். தற்போது மதுரை அரசு இசைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். இவரிடம் பயின்ற 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வித்வான்களாக திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழமுதிர்ச்சோலை என பல கோயில்களில் பணியாற்றி வருகின்றனர்.

தியாகராஜ பாகவதரின் கீர்த்தனைகளை இவர் இந்துக்களின் முறைப்படி நெற்றியில் விபூதி பூசி பக்தியுடன் வாசிக்கிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்து, அரை மணி நேரம் அவரிடம் நாதஸ்வரம் வாசித்து பாரட்டு பெற்றுள்ளார். அதனை மகிழ்ச்சியான நிகழ்வாக நினைவு கூறுகிறார். இவரது செயலை மதநல்லிணக்க முயற்சியாக பலரும் பாராட்டுகிறார்கள்.

கலைகளை கற்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி கட்டாயமாக உள்ளது. இதனை மாற்றி பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்த மாணவர்களையும் சேர்க்க அனுமதி அளித்தால் அதன் மூலம் நாதஸ்வர கலை மேலும் உயரும் என தெரிவிக்கிறார்.

Exit mobile version