மகா சிவராத்திரியையொட்டி கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நிறைவு பெற்றுள்ளது. விழாவில் 80 நிகழ்ச்சிகளில் 600க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
மகா சிவராத்திரியையொட்டி கடந்த 4ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. பிரபல நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் பங்கேற்று விழாவை துவக்கி வைத்தார். இதையடுத்து கடந்த 5 தினங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 நாட்டிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடினர். விழாவில் 80 நிகழ்ச்சிகளில் பரதம், நாட்டிய நாடகம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பலவகையான நடனங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்று ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.