இயற்கை விவசாயத்தை காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டு வரும்நிலையில், சென்னையில் மகளிர் இணைந்து நடத்திய இயற்கை வேளாண் சந்தை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து விளக்கும் செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
அதிகாலை கண் விழித்தது முதல் இரவில் உறங்க செல்லும் வரை அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருளாகவே உள்ளன. இந்தநிலையில் விவசாயத்தை காக்க இயற்கையான பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் இயற்கை வேளாண் சந்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.
முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான இயற்கை பொருட்கள் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் செயற்கை சார்ந்த அழகு சாதன பொருட்களால் சுற்றுசூழல் மாசுபடுவதாகவும், இதனை தவிர்க்க அனைவரும் பாசிபயறு, வெந்தயம் போன்ற பொருட்களை வைத்து வீட்டிலே அழகு சாதன பொருட்களை தயாரித்து உபயோகிக்கலாம் என்கின்றார் காயத்ரி.
அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக உழைத்து வரும் நாம் அதனை நச்சு பொருட்களுக்காக செலவிடமால், இயற்கை சார்ந்த பொருட்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய நவீன யுகத்தில் நமது அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் அனைத்துமே செயற்கையான பொருட்களாக மாறிவிட்டநிலையில் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி இயற்கையை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.