வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மூன்று மணிநேரம் முடக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரிய போராட்டத்தில், மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மூன்று மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில், நாடு முழுவதும் பல்வேறு மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், லூதியானா, மொஹாலி ஆகிய மூன்று நகரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு விவசாய சங்கங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்.
ஹரியானா – ராஜஸ்தான் எல்லைப் பகுதியான ஷாஜகான்பூரில் தேசிய நெடுஞ்சாலையை மூன்று மணிநேரம் முடக்கி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதில், இடதுசாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாடல் பாடியும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் பிரமாண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களை, காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.
இதே போல, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட்டு விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி, விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, டெல்லி எல்லைகளில் அசாம்பாவிதங்களை ஏற்படாமல் இருக்கும் விதமாக, 50ஆயிரம் காவலர்கள், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் காவல்துறையினர் தயார்நிலையில் உள்ளனர். டெல்லி எல்லைகளில் ட்ரோன் கேமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. 12 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.