தேசிய கைத்தறி கண்காட்சி: வாடிக்கையாளர்களை ஈர்த்த துணி ரகங்கள்

சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேசிய கைத்தறி கண்காட்சி – 2019-ல் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் பிரசித்திபெற்ற துணி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

கைத்தறியை மேம்படுத்த தமிழக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக கைத்தறி துணி வகைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அதன் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தேசிய கைத்தறி கண்காட்சி- 2019 சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதியிலிருந்து நடந்து வருகிறது.

இந்த தேசிய கைத்தறி கண்காட்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை கீழ் உள்ள 150க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.இது மட்டுமல்லாமல் ஆந்திரா , மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத் உத்திரபிரதேசம் , கேரளா , பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் துணி ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒரே இடத்தில் இந்தியாவின் பிரசித்திபெற்ற துணி ரகங்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியின் சிறப்பாகும். 61 அரங்குகளில் 4 கோடி மதிப்பிலான கைத்தறி காட்டன் சேலைகள் , பட்டு சேலைகள் , பட்டு வேஷ்டிகள் , காட்டன் வேஷ்டிகள் மற்றும் பல துணி ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சேலம் வெண்பட்டு, மதுரை சுங்குடி, காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம் பட்டு, சென்னிமலை பெட்ஷீட் , பவானி ஜமுக்காளம் , சின்னாளப்பட்டி டை அன்ட் டை துணி ரகங்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன .

நெகமம் , செட்டிநாடு , கூறைநாடு ஆகிய துணி ரகங்களும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளன.தீபாவளி பண்டிகைக்கு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள் மற்றும் கைத்தறி துணிகளை வாங்க ஆர்வம் உள்ளவர்கள், கண்காட்சி அரங்குகளில் தங்களுக்கு பிடித்த துணி வகைகளை வாங்கி செல்கின்றனர். சென்னையில் வேறு எந்த துணி கடைகளிலும் கிடைக்காத அறிய தூய பட்டு சேலைகள் , ஜரிகை சேலைகள் இங்கு கிடைக்கின்றன . எனவே வாடிக்கையாளர்கள் கலைவாணர் அரங்கத்தை தேடிச் செல்கின்றனர்.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கலைவாணர் அரங்கத்தில் தேசிய கைத்தறி கண்காட்சி மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது.குறைந்த செலவில் பட்ஜெட்டுக்கேற்ற துணி ரகங்கள் முதல் 55000 ரூபாய் வரையிலான பட்டு சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் தமிழக அரசின் உதவியோடு நடந்துவரும் இந்த கண்காட்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version