தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் : சேலத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலி

சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் குழந்தை தொழிலாளர் இல்லாத சூழல்நிலை உருவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார். தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் சேலம் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய போது மீட்கப்பட்ட சிறுவர்கள், ஸ்மைல் சிறப்பு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், வெள்ளிப்பட்டறை, மோட்டார் வாகன பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர்கள், சுய உதவி குழுவினர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்கள் தொழில்கூடங்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதில்லை என்ற உறுதிமொழி படிவதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

இதே போல் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Exit mobile version