நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஓளிபரப்பிய செய்தியின் எதிரொலியாக அரசு பள்ளி மாணவி ஒருவர், நாசா சென்று வருவதற்கான நிதியுதவியை அளிக்க, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதை அடுத்து, அம்மாணவி சார்பிலும், பள்ளியின் சார்பிலும், நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி, புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடைய குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ள போதும், அறிவியல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக உள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தன்னுடைய ஆராய்ச்சி நிலையத்தை காண்பதற்கு இணையவழி தேர்வை நடத்தியது. இதில் தமிழ்நாடு முழுவதும் 100 மாணவ மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர். மற்ற அனைவரும் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், மாணவிக்கு அமெரிக்கா சென்று வருவதற்கான நிதியுதவி தேவைப்படுவதாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. செய்தி ஒளிபரப்பாகிய சில மணி நேரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அந்த மாணவி அமெரிக்கா சென்று வர உதவ முன்வந்துள்ளனஇதனையடுத்து, செய்தியை ஒளிபரப்பி, உதவி கிடைக்கச் செய்த நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு, மாணவி ஜெயலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.