பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வரும் 30-ம்தேதி பதவியேற்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 354 தொகுதிகளை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் மோடி ஒருமனதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, ஆட்சியமைக்க குடியரசு தலைவரிடம் அவர் உரிமை கோரினார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடியை மீண்டும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடியுடன் புதிதாக பதவியேற்கும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version