நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு – தொகுதி நிலவரம்

பாராளுமன்ற தேர்தலின் போது நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச். வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாங்குனேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியானது.

கடந்த ஜூன் மாதம் விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

நாங்குநேரி தொகுதி:

நாங்குநேரி தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது. இதில் பாளையங்கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி ,எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல குளம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகள் உள்ளன.2016ஆம் ஆண்டு நிலவரப்படி இங்கு, 2,38,937 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,18,859 பேர், பெண்கள் 1,20,073 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் ஆவர்.

 2016ல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் மா.விஜயகுமார் இங்கு 33.4% வாக்குகளைப் பெற்று, காங்கிரஸ் கட்சியின் வசந்த குமாரிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.இங்கு, 2011, 2001, 1991, 1984, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. எனவே நாங்குநேரி அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகப் பார்க்கப்படுகின்றது. 

விக்கிரவாண்டி தொகுதி:

விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இது கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தேர்தலை சந்தித்து உள்ளது.

கடயம், கருவாட்சி, சின்னப்பநாயக்கன்பாளையம், பனமலை, சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், , ஆலாத்தூர், வீராட்டிக்குப்பம், வாக்கூர், பகண்டை, தென்னவராயம்பட்டு மற்றும் மூங்கில்பட்டு கிராமங்கள், விக்கிரவாண்டி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இந்தத் தொகுதியில் உள்ளன.  2016ஆம் ஆண்டு நிலவரப்படி இங்கு, 2,17,174 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,08,834 பேர், பெண்கள் 1,08,318 பேர், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ஆவர்.

கடந்த 2016 பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சேவல் ஆர் வேலு 31.8% வாக்குகளைப் பெற்று, திமுக வேட்பாளர் இராதாமணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.முந்தைய 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அப்போது அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் திமுக வேட்பாளர் தோற்றார். எனவே விக்கிரவாண்டி அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகக் கருதப்படுகின்றது.இந்நிலையில், இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனேயே இந்த 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக தலைமையும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

 

Exit mobile version