நாங்குநேரி இடைத்தேர்தல்: சுயேட்சையாகக் களமிறங்கும் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபி மனோகரனை அறிவித்துள்ளதால், அவருக்குப் போட்டியாக உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில், தொகுதிக்குட்பட்ட புதுக்குளத்தைச் சேர்ந்த அதிமுகவின் மாணிக்கராஜ் வெற்றிபெற்றார். அதன்பிறகு கடந்த மூன்று முறையும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான வசந்தகுமார் 2006, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் தொழில் செய்து வருபவருமான எர்ணாவூர் நாராயணன் 2011 தேர்தலில் வெற்றிபெற்றார். அதிமுகவின் சார்பில் 2001ஆம் ஆண்டு மாணிக்கராஜ் வெற்றிபெற்றதற்குப் பிறகு தொகுதியைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது நாங்குநேரி மக்களின் நீண்டகால மனக்குறையாக உள்ளது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் உள்ளூர்க்காரரான ரெட்டியார்பட்டி நாராயணனை அதிமுக வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது.

அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் எண்ணங்களை மதிக்காமல் பணம்படைத்த வெளிமாவட்டத் தொழிலதிபர்களையே வேட்பாளர்களாகக் களமிறக்கும் காங்கிரஸ் கட்சி, இம்முறையும் அதே தவறையே செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வருபவருமான ரூபி மனோகரன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.கே.வி.சிவக்குமார், களக்காடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட உள்ளூர்க்காரர்கள் 8 பேர் விருப்ப மனு அளித்து, வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக் கூடாது என எச்சரித்திருந்தும் அதையும் மீறி ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சுவாமிநாதன் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி உள்ளூர் மக்களை மதிக்கவில்லை என்றும் 25 கோடி ரூபாய் கொடுப்பவர்களுக்குத் தான் சீட் என வெளிப்படையாக அறிவித்து அதன்படி செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதேபோல நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரசைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கக் கூடாது என ஒரு கூட்டத்திலேயே பேசியுள்ளார்.

உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்காத காங்கிரஸ் தலைமை வெளியூர்க்காரரை வேட்பாளராக அறிவித்து, உள்ளூர் உட்கட்சிப் பிரமுகர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. இதனால் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version