நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரம்: 9 இடைத் தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் குழந்தை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 9 இடைத் தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் அமுதா என்கிற ஓய்வு பெற்ற செவிலியர், குழந்தை விற்பனை தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் கொல்லிமலைப் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 குழந்தைகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து குழந்தைகள் வாங்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகளை இடைத்தரகர்கள் மூலம் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பர்வீன், நிஷா, தமிழ்செல்வி,செல்வி, கோமதி, பாலாமணி, ஜெயராஜ், பாண்டியன், அருள்சாமி ஆகிய 9 இடைத்தரகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜகுமாரி,சுந்தரபாண்டியன் தம்பதியினர், ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.அதில் கடந்த 2012 ம் ஆண்டு தங்களது ஆண் குழந்தை, பிறந்த 2 நாட்களில் காணாமல் போனதாகவும் இது குறித்த சிசிடிவி காட்சிகளில் உள்ள பெண், செவிலியர் அமுதா போல இருப்பதாவும் கூறியுள்ளனர்.

Exit mobile version