சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம், பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மதிப்பில் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தையும் சேர்த்துள்ளது. இதனையடுத்து முன் ஜாமின் கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நளினி சிதம்பரத்திற்கு 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இரண்டு வாரத்திற்குள் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தும், பிணைத் தொகையை செலுத்தியும் முன் ஜாமினை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் கொல்கத்தா நீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தியுள்ளார்.