நாகை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் திடீரென நிறுத்தப்பட்டதால் கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகூரை சேர்ந்த தனியார் வங்கியில் உதவி மேலாளரான ராஜேஷ், கொரோனா தொற்று காரணமாக, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக ஆக்சின் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 20 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால், 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மூச்சு திணறலால் அவதியடைந்தனர். ராஜேஷ் மரணமடைந்த நிகழ்வை அருகில் இருந்து பார்த்த அவரது மனைவி, மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே தனது கணவர் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, மருத்துவமனை வளாகத்தில் அழுது புரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக நோயாளிகள் அவதி அடைந்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.