இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து, கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 படகுகளில் கோடியக்கரை அருகே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இரண்டு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ், பேட்டரி உள்ளிட்ட கருவிகளையும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் 3 பேர் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 மீனவர்கள் 19 நாட்டிங்கால் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபொது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
2 படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, கார்த்திக் என்ற மீனவருக்கு கை விரல் மற்றும் அவரது காலிலும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, காயமடைந்த மீனவருக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களின் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அச்சமின்றி மீன்பிடித் தொழில் செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post