நாகை காங்கிரஸில் கோஷ்டி மோதல் அதிகரிப்பால் திமுகவினர் கலக்கம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளதால் திமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறையை தலைமையாக கொண்டு நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்பட்டு வருகிறது. வடக்கு மாவட்ட தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் பதவி வகித்து வருகிறார். இவர் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை எஸ்.சொக்கலிங்கம் என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கத்தை அறிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு காங்கிரஸில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த ஆலோசனை கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை என்றும் கடந்த முறை திமுக தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அவரை மாற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் தேர்தல் பணியாற்றமாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலால் திமுகவினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version