சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை சாலையில் இரவு நேரத்தில் தெரியும் மர்மமான வெள்ளை நிற உருவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன ஓட்டுநர் ஒருவர் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைப்பாதையின் இரண்டாவது வளைவில் வெள்ளை நிறத்தில் உருவம் ஒன்று சாலையை கடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். இதே போல சக ஓட்டுநர்களும், மர்ம உருவத்தை அடிக்கடி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.