சிதம்பரத்தில் பிரபல ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்துக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்கிற கோழி பாண்டியன் வயது 40. இவர் மீது அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட சுமார் 10 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கோழி பாண்டியன், தனது நண்பரான ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டனுடன் அண்ணாமலைநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து உணவகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்மக் கும்பல், அரிவாளால் கோழி பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடி விட்டது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாமலைநகர் போலீசார் ரவுடி கோழி பாண்டியனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது வெடிக்காத வெடிகுண்டு ஒன்றையும் அங்கிருந்து கண்டுபிடித்து, பத்திரமாக எடுத்துச் சென்றனர். மேலும் அந்த இடத்தில் கிடந்த பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அண்ணாமலைநகரில் பதற்றம் ஏற்படாமல் இருக்க பல்வேறு இடங்களில் காவல்துறைப் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.