சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாயமான ஐம்பொன் சிலைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிலைகள் கோயில் முன்பு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 19ஆம் தேதி கோயில் கதவை உடைத்த மர்ம நபர்கள 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரியமாணிக்க பெருமாள் சிலை, ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் மற்றும் 3 பவுன் தங்கசெயினையும் கொள்ளையடித்து சென்றனர். மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து மானாமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை திருடு போன சிலைகள் கோயில் முன்பு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை கழுத்தில் இருந்த தங்க செயின் மட்டும் மாயமாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.