சென்னை வேப்பேரியில் பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் ஒரு சவரன் தங்க செயின் கொள்ளைச் சம்பவத்தில் 2 பேரை தேடி களத்தில் இறங்கிய தனிப்படை காவல்துறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த கொள்ளை கும்பலை கைது செய்தது.
சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் அமைந்துள்ள மகளிர் விடுதியில் தங்கி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நிர்வாகப் பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் செல்வ மெரின் என்பவர் கடந்த 25ம் தேதி காலையில் தனது பணிக்கு செல்வதற்காக விடுதியில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்கு ஈவிகே சம்பத் சாலையில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், செல்வ மெரின் எதிர்பாராதநேரத்தில் அவரது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தனது வாகனத்தில் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்வ மெரின் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் ஆய்வாளர் செல்லபாண்டியன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த இடத்தில் வைத்து நடராஜன் என்ற ராஜா, சந்துரு, தேஜா, தினேஷ் ஆகிய 4 குற்றவாளிகளையும் கைது செய்தனர். 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்த 46 சவரன் தங்க நகைகளை வண்டலூரில் பிரகாஷ் மற்றும் பாரிமுனையில் உள்ள அடகுகடைகளில் இருந்து மீட்டனர். பிறகு 4 கொள்ளை கும்பலையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் புழல்சிறையில் அடைத்தனர்.
ஒரு சவரன் தங்க செயின் 2 கொள்ளையர்களை தேடிச்சென்று, 4 கொள்ளையர்களையும் 46 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 செல்போன்களை மீட்ட உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் ஆய்வாளர் செல்லபாண்டியனை விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தமைக்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.