சேலம் ஆத்தூரில் கடந்த திங்களன்று கடத்தப்பட்ட தொழிலதிபரை, கண்கள் கட்டிய நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே விட்டுச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆத்தூரை அடுத்த தண்டவராயபுரத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் அதிபர் சுரேஷை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதனிடையே கடத்தலுக்கு பயன்படுத்திய கார் சேலம் அரசு மருத்துவமனை அருகில் மீட்கப்பட்டது. காரில் பதிவான கைரேகையின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம கும்பலைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தல் கும்பல் தொழிலதிபரை கண்கள் கட்டிய நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே விட்டுச் சென்றது. இது குறித்து தகலவறிந்த காவல்துறையினர் சுரேசை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.