பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் மீர்ப்பூர் மதெல்லோ பகுதியில் வசிக்கும் இந்து குடும்பத்தை சேர்ந்த நம்ரிதா சந்தானி என்பவர், லர்கானா பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரியின் விடுதி அறையில் நம்ரிதா சடலமாக கிடந்தார். நம்ரிதா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டி உள்ளார்.
இருப்பினும் அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, நம்ரிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கராச்சியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் மெழுகு வர்த்தி ஏந்தி நம்ரிதாவுக்கு அஞ்சலி செலுத்திய அவர்கள், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி மறியலில் ஈடுபட்டனர். இதனால் கராச்சியில் பதற்றம் நிலவி வருகிறது.