திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இதயம் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல். இவருக்கும் வேலூரை சேர்ந்த லாவண்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. அமைதியாக இருந்த குடும்பத்தில் லாவாண்யாவால் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கணவர் சக்திவேலிடம் லாவண்யா அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். ஆனால் தாயை விட்டு பிரிந்து வர முடியாது என்ற தமது நிலைப்பாட்டில், சக்திவேல் உறுதியாக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக கணவன், மனைவிக்குக்குள் கருத்து வேறுபாடு உச்சம் பெற, குழந்தை சவினாவுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன் லாவண்யா வேலூரில் உள்ள தமது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். குழந்தையை தம்மிடம் கொடுக்கும்படி லாவண்யாவிடம் பலமுறை சக்திவேல் கேட்டுக் கொண்டும் குழந்தையை தர அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, லாவண்யா வேறு ஒரு நபரை இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஜோலார்பேட்டை ஆசிரியர் நகர் பகுதிக்கு காரில் வந்த லாவண்யாவும், அவரது தாயும், குழந்தை சவினா திடீரென இறந்துவிட்டதாக கூறி, சடலத்தை சக்திவேலிடம் கொடுத்து விட்டு தப்பினர். குழந்தையின் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார் சக்திவேல்.
இதுகுறித்து உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருப்பதால் குழந்தை அடித்து கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
2 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்தது ஜோலார்பேட்டை பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.