முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். உடனடி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவின் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப கோரிய கட்சிகளுக்கு ஆதரவாக 84 வாக்குகளும் எதிராக 100 வாக்குகளும் பதிவாகின.
இதையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.