கொள்ளையன் முருகன், இரண்டு காவலர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாக வாக்கு மூலம் அளித்த நிலையில், அவர்களுக்கு காவல்துறை சார்பில் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில், 19க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
தனிப்படை காவல்றையினர் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் அனைவரும் கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை திருச்சி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்த போது, சென்னை அண்ணாநகரில் ஒரு வீட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடித்ததாக முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் தனக்கு இடையூறுராக இருந்த காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவும், அதற்காக கிருஷ்ணமூர்த்தி, காவலர் ஜோஜப் ஆகியோருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த, 10 லட்சம் ரூபாய் மற்றும் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகையை விற்று, அதிலிருந்து 10 லட்சம் ரூபாயையும் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துள்ளதாகவும் கொள்ளையன் முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜோசப் ஆகிய இருவருக்கு வரும் ஜனவரி, 3ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சமயபுரம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.