திருச்சி பா.ஜ.க பிரமுகர் கொலை, மதத்தின் அடிப்படையில் நடக்கவில்லை என்று மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், வரகனேரி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க மண்டலச் செயலாளர் விஜய் ரகு, நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக பிரமுகர் விஜய் ரகு கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது தெரியவந்துள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாபு என்கிற மிட்டாய் பாபுவும், அவருடைய நண்பர்கள் இருவரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக தெரிவித்தார். அவர்கள் யாரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறிய அவர், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.