நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜனும், வான்மதியும், கடந்தாண்டு இருவீட்டார் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் செய்து, நெல்லை டவுன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்து 15 நாள் கடந்த நிலையில், நம்பிராஜனை வான்மதியின் உறவினர்கள் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றனர்.
அதற்குப் பழிவாங்கும் நோக்கில், கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்களான சுரேஷ், ஆறுமுகம் ஆகிய இருவரை நம்பிராஜன் தரப்பு கொலை செய்தது. இந்த பழிவாங்கல் படலத்தின் தொடர்ச்சியாக சனிக்கிழமையன்று நம்பிராஜன் வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டை வீசியது.
இதில், நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், சகோதரி சாந்தி, அவரது 3வயது பெண் குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். அப்போதும், ஆத்திரம் தீராத அந்த கும்பல்,சண்முகத்தாய், சாந்தி ஆகிய இருவரது கழுத்தையும் கொடூரமாக அறுத்துக் கொன்றது. சாந்தியின் தலை துண்டான நிலையில், காயமடைந்த 3வயது குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து வான்மதி தரப்பை சேர்ந்த 12 பேர் மீது 11 வழக்குகள் பதிவு செய்து, கொலையாளிகளை 4 தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்