தெலங்கானாவில் பெண் வனத்துறை அதிகாரி மீது, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சர்சலா கிராமத்தில், மரக்கன்று நடும் பணியில் வனத்துறை அதிகாரி அனிதா தலைமையில், வனத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிர்பூர் எம்.எல்.ஏ. கொனேரு கொன்னப்பாவின் சகோதரர், கிருஷ்ணா ராவ் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர், வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வனத்துறை அதிகாரி அனிதாவை அவர்கள் தடியால் தாக்க முயன்றனர். சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, அங்கிருந்த டிராக்டர் ஒன்றில் அனிதா ஏறினார். ஆனால், விடாமல் துரத்திய கிருஷ்ணா ராவ், தடியால் அவரை தாக்கினார். இதில் நிலைகுலைந்த அனிதாவை போலீசாரும், வனத்துறையினரும், பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.