விபத்தில்லா புத்தாண்டை வரவேற்க மாநகர காவல் துறை நடவடிக்கை

2020-ம் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்கும் வகையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விபத்தில்லா, பாதுகாப்பான புத்தாண்டினை கொண்டாட வேண்டும் என சென்னை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாகசம் என்ற பெயரில், வாகனங்களில் அதிவேகமாக சென்று விபத்து நிகழ்த்தியதால், 7 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதும் சென்னை மாநகர காவல் துறையினர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை எடுத்த தீவிர நடவடிக்கையால் உயிரிழப்புகள் வெகுவாகவே குறைந்தன.

பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டம் என்பது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு, தன்னை எடுத்து செல்லும் ஆண்டாக கொண்டாடுகிறோம். ஆனால் சில இளைஞர்கள் ஆர்வ மிகுதியால் மது போதையில், கொண்டாட்டங்கள் என்ற பெயரில், வாகனங்களில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரின் எதிர்காலத்தையும் கேள்வி குறியாக்குகிறது. இதனால் இளைஞர்கள் தங்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்கிறது சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை.

விபத்தில்லா புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சுய கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே விபத்தில்லா புத்தாண்டு என்பது சாத்தியமாகும்.

Exit mobile version